இலங்கையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இலங்கையில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலச்சரிவு காரணமாக பலர் காணவில்லை என கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பதுளை என்ற பகுதியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பதுளை, அங்தெனிய மற்றும் அதை ஒட்டிய பிரதேசங்களில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளின் மீது மண் சரிந்து விழுந்துள்ளதாகவும் அதில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவம் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 80 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும், தலைநகர் கொழும்பிலிருந்து கண்டி, பதுளை, மாத்தளை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.