இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

bus strikeதிமுகவின் தவறான வழிநடத்தலால் போக்குவரத்து தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். மேலும் தமிழகத்தில் இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி அரசுக்கு தலைமை தாங்கி ஆட்சி நடத்தி போக்குவரத்து துறையை சீரழித்து விட்டுச் சென்ற கருணாநிதி இன்றைக்கு போக்குவரத்துக் கழகங்களில் மைனாரிட்டி நிலையில் உள்ள தி.மு.க.வைச் சார்ந்த தொழிற்சங்கமான தொ.மு.ச.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றினை கடந்த 28 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

வெறும் 13.96 சதவீத உறுப்பினர்களைக் கொண்டுள்ள தொ.மு.ச வைச் சார்ந்த பணியாளர்களை தூண்டிவிட்டு சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வைத்த கருணாநிதி தனது அறிக்கையில் இந்த அரசை குறை கூறி கண்டித்துள்ளார். தி.மு.க.வைச் சார்ந்த தொ.மு.ச.வினர் சட்ட விரோதமாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதை மறைக்கும் விதமாகவே இது போன்ற ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா 3 ஆவது முறையாக தமிழகத்தின் முதல்வராக 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாயாகும். பணியிலிருந்து ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 922 கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்கியவர் ஜெயலலிதா தான். போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டிருந்தன.

194 பேருந்துகள் விபத்து இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டிருந்தன. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக் கழகங்கள் நொடிந்து விடாமல் காப்பாற்றப்பட 1,298 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியவர் ஜெயலலிதா தான்.

போக்குவரத்து ஊழியர்களுடனான ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பற்றிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1.1.2015 முதல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதமொன்றுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, ஊதிய ஒப்பந்தம் உரியவாறு மேற்கொள்ளப்படும் என்பதையும் 8.12.2014 அன்று நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலே அறிவித்தேன்.

சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பின் அடிப்படையில், இன்றைய தேதியில் 91,440 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவையுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். 18 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே உள்ள தொ.மு.ச. பேரவை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தகுதியினை இழந்த நிலையில் உள்ளது.

தொழிலாளர் நலன் கருதி அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தொ.மு.ச. பேரவையைச் சேர்ந்தவர்கள் வீணடித்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 1.9.2013 முதல் ஏற்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்தினைத் தடுத்ததோடு, 29.12.2014 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துவிட்டு, முன்னறிவிப்பு ஏதுமின்றி 28.12.2014 அதிகாலை முதல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து இயக்கங்களைத் தடுத்தும், பணிக்கு வந்த ஒட்டுநர், நடத்துநர்களைத் தாக்கியும், பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டனர்.

தொ.மு.ச வைச் சேர்ந்த பணியாளர்களில் தி.மு.க.வினரால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ள சில தொ.மு.ச. உறுப்பினர்கள் பணிக்கு வராததோடு, வன்முறையிலும் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையையும், பொதுமக்களையும் பிணையமாக்க முடியாது என்பதால் தான் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் சுமார் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நாளை முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு உள்ளது.

மேலே சொன்னவாறு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை எவ்வாறு நடத்த இயலும்? போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மிக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கப் பேரவை தான் என்பதை தொ.மு.ச–வைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலமாகத் தாக்கல் செய்தால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிக்கப்பட்டு, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு வழிவகை ஏற்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் நலனில் உண்மையிலேயே கருணாநிதிக்கு அக்கறை இருக்குமேயானால், இது போன்ற ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply