மூளைச் சாவு அடைந்த திருச்சி இளைஞரின் உடல் உறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து அடையாறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த வேன் செல்வதற்கு வசதியாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று முன் தினம் கவலைக்கிடமாகி பின்னர் சிறிது நேரத்தில் மூளைச்சாவு அடைந்தார்.
தகவல் அறிந்த இளைஞரின் பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, மருத்துவர்களிடம் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை தனியாக எடுத்தனர்.
ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அப்போலோ மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மற்றும் இதயம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவரின் கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் தேவையானவர்களுக்கு கண்களை பொருத்த திட்டமிட்டுள்ளனர்.
இதயம் மற்றும் சிறுநீரகத்தை சுமந்து கொண்ட சென்ற வேன் ஆயிரம் விளக்கில் இருந்து சுமார் 100 கிமீ வேகத்தில் அடையாறு மருத்துவமனையை பத்தே நிமிடத்தில் சென்று அடைந்தது. ஆம்புலன்ஸ் எளிதாக செல்வதற்கு வசதியாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து போலீஸார் பார்த்துக் கொண்டனர்.