போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளன. எனவே இன்று மாலை முதல் வழக்கமாக பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கும் என கூறப்படுகிறது.
சம்பள உயர்வு ஒப்பந்தம்,பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஞாயிறு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு அடைந்தது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
நேற்று மாலை தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், சென்னை போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆனாலும் முடிவு எதுவும் எட்டப் படவில்லை.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் சி.ஐ.டி.யு. தலைவர் அ.சௌந்திரராஜன் தெரிவித்துளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது இதனால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்.
கடந்த 4 நாட்களாக நடை பெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.