வீட்டுக்கான புத்தாண்டு தீர்மானம் !!

own_house_2258941f

வருடா வருடம் புத்தாண்டு பிறந்ததும் இனி பண விரயம் செய்யமாட்டேன், குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பேன், உடல் எடையைக் குறைப்பேன் எனப் பல தீர்மானங்கள் எடுப்போம். ஆனால் குடியிருக்கும் வீட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசிக்கிறோமா? அது குறித்து தீர்மானங்கள் எடுக்கிறோமா? வாருங்கள் 2015-ஐ நோக்கி உங்கள் வீட்டுக்கான தீர்மானங்களை எடுப்போம்.

பொருள்களை ஒழுங்குபடுத்துவோம்

போகிப் பண்டிகை அன்று வீட்டில் மண்டிக் கிடக்கும் குப்பைகளை, பாழடைந்த பொருள்களை அப்புறப்படுத்துதல் நமது வழக்கம். அதை வருடம் முழுவதும் கடைப்பிடித்தால் நம் வீடு எப்பொழுதுமே சுத்தமாக இருக்கும் அல்லவா! நம் தேவைக்கு அதிகமான பொருள்களைச் சேர்க்காமல் இருப்பதும்கூட ஒருவிதத்தில் நம் வீட்டை நன்றாகப் பராமரிக்கும் முறைதான். நமக்கு அவ்வளவாகப் பயன்படாத அதே சமயம் உபயோகப்படக்கூடிய பொருள்களைப் பிறருக்குக் கொடுத்து உதவலாம்.

வீட்டிலேயே சூழலின் நண்பன்

அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும்போது அதிக அளவில் கார்பன் வெளியேற்றப்படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் மட்டுமல்ல நம் வீடுகளிலிருந்தும் கார்பன் வெளியேறுகிறது. அப்படிப் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகிறோம். அதற்காகச் சூழலியல் நண்பராக சூரிய ஆற்றல் கொண்ட மின்சாரத்துக்கு அனைவரும் உடனடியாக மாறும் சுழல் இன்னும் வரவில்லை. ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நம் வீட்டின் செலவையும் குறைக்க முடியும், சிறு துரும்பளவிலாவது சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குக் கைகொடுக்க முடியும்.

# குண்டு பல்புகளுக்கு பதிலாக சிஎஃப்எல் பல்புகள் பயன்படுத்தலாம்.

# மின்சாரத்தை சேமிக்கும் தொழில்நுட்பம்கூடிய ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

# சிஎஃப்சி அல்லாமல் பசுமைத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏசி, ஃபிரிட்ஜை தேர்ந்தெடுக்கலாம்.

# ஹேர் ட்ரையர் அதிக அளவில் மின்சாரம் குடிக்கும் மின் கருவியாகும். ஆகவே ட்ரையரின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

# குறைந்த பட்சம் படுக்கை அறையை விட்டு வெளியே வரும்போது உடனடியாக மின் விளக்குகள், மின் விசிறி, ஏசியை ஆஃப் செய்துவிட்டு செல்லலாம்.

இவை மிகச் சாதாரண குறிப்புகள்தான். ஆனால் 2015-ஐ இப்படியும் வரவேற்கலாம் தானே!

Leave a Reply