வைஸ்யா வங்கியை கோட்டக் மகிந்திரா வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜன.7ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ.சீனிவாசன், அகில இந்திய ஐஎன்ஜி வைஸ்யா அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.ஸ்ரீதர் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களீடம் கூறியதாவது:
வைஸ்யா வங்கி 1930-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தனியார் வங்கியாகும். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 600 கிளைகள் உள்ளன. பத்தாயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். கடந்த 2002-ம் ஆண்டு வைஸ்யா வங்கியின் 43 சதவீத பங்குகளை நெதர்லாந்தைச் சேர்ந்த ஐஎன்ஜி என்ற நிறுவனம் கையகப்படுத்தியது.
ரூ.600 கோடி முதலீடு செய்த ஐஎன்ஜி நிறுவனம், ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்ததும் அப்பணத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று விட்டது. இதையடுத்து, இந்த வங்கியை கோட்டக் மகிந்திரா வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வைஸ்யா வங்கியில் ரூ.22 கோடிக்கு நிதிமுறைகேடு நடந்துள்ளது. இதை மறைப்பதற்காக இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால், வைஸ்யா வங்கியில் தற்போது பணிபுரியும் நான்காயிரம் நிரந்தர ஊழியர்களும், ஆறாயிரம் ஒப்பந்த ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
ஏற்கெனவே, மதுரா வங்கி ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டதால், மதுரா வங்கியில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர். எனவே, மகிந்திரா வங்கியுடன் இணைப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியுடன் வைஸ்யா வங்கியை இணைக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக, வைஸ்யா வங்கி, மகிந்திரா வங்கி மற்றும் வைஸ்யா வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.7-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.