திமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், இதனால் நேற்றிரவு ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் இடையே கடும் சொற்போர் ஏற்பட்டதாகவும் இறுதியில் திமுகவில் இருந்து விலகப்போவதாக ஸ்டாலின் கோபத்துடன் கூறிவிட்டு சென்றதாகவும் செய்திகள் வெளியானது.
ஸ்டாலினின் இந்த அதிரடி முடிவு காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள திமுக தொண்டர்கள் அவருடைய வீட்டின் முன்பு குவிந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “திமுகவில் கலகத்தை ஏற்படுத்தவும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கவும் சிலர் வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக ராஜினாமா கடிதம் எதையும் கொடுக்கவில்லை.
திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு க.அன்பழகனும் போட்டியிடுகின்றனர். நான் பொருளாளர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறேன்” என்று கூறினார்.