ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அதற்கு அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்குமே தவிர அதற்கு பொறுப்பேற்க முடியாது என உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சர் கூறிய கருத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மைனர் பெண் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டு போலீஸ்காரர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உ.பி.மாநில பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அருணா கோரி கூறியபோது, “சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது மட்டுமே அரசின் கடமை. இதற்கு முழு பொறுப்பு பொறுப்பற்ற சமூகமே ஆகும்’ என்று கூறியுள்ளார்.
அமைச்சர் அருணா கோரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உ.,பி. அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சுதிந்திரா பதோரியா: இது அமைச்சரின் பொறுப்பற்ற கருந்தாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேச அரசால் இயலவில்லை. தங்களது கையாலாகாத தன்மையை மறைப்பதற்கு இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார்கள். குறிப்பாக, பெண்களை காக்க முடியவில்லை என்றால் அவர்கள் பதவி விலகட்டும்”
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா: ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ள வலியை ஒரு பெண் அமைச்சரே புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையானது. அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்”
மேலும் உ.பியை சேர்ந்த மகளிர் ஆணையம் மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் ஆகியவைகளும் பல பெண்கள் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை அருணா கோரிக்கு தெரிவித்துள்ளன.