உத்தரபிரதேச எம்.எல்.ஏ ஒருவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றதால் அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை இழந்தார். மேலும் அவர் உடனடியாக சிறையிலும் அடைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கப்டன் சிங் ராஜ்புத் என்பவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும்,இவரது சசோதரர் லஷ்மண் ஆகிய இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி ஒரு நபரை அடித்துக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறிய அவர் தண்டனை குறித்த விவரங்களை வேறொரு நாளில் அறிவிக்க இருப்பதாக கூறினார். கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ராஜ்புத் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி சஞ்சய் குமார், குற்றவாளியான கப்டன் சிங் ராஜ்புத் எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரருக்கு ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் ராஜ்புத் தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.