சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று எடுத்த சர்வேயில், ‘இரவு மற்றும் பகல் என மாற்றி மாற்றி சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கு இருதயம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அலுவலகங்களில் இரவு நேரத்தில் பணிபுரிபவர்களை புற்றுநோய் தாக்கும் என கடந்த 2007ஆம் ஆண்டே செய்திகள் வெளிவந்த நிலையில் பகல் மற்றும் இரவு என மாறி மாறி சுழற்சி முறையில் பணிபுரிபவர்களின் உடல்நிலை எப்படி இருக்கும் என சர்வதேச ஆய்வுக் குழுவால் ஒரு சர்வே நடத்தப்பட்டது.
இந்த சர்வேயில் அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சுழற்சி முறையில் பணியாற்றிய 74,862 நர்ஸ்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர்களது உடல்களும் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சர்வே முடிவின்படி இரவு நேரப் பணியாளர்கள் மட்டுமன்றி, சுழற்சி முறையில் பணியாற்றுபவர்களுக்கு இருதயம், ரத்தக் குழாய்கள் , நுரையீரல் தொடர்பான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், இரவுப் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், சுழற்சி முறையில் இரவுப் பணியாற்றுபவர்களை நுரையீரல் புற்று நோய் மட்டுமே தாக்கியுள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
“அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின்’ மருத்தவ ஆய்வு மாத இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.