உலகின் முதல் நடராஜர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம் விமரிசை!

திருநெல்வேலி :

திருநெல்வேலி செப்பறை அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. தமிழகத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் ராஜவல்லிபுரம் அருகே செப்பறையில் அமைந்துள்ளது.

images

செப்பறை என்பது செப்பு தகடுகளால் வேயப்பட்ட தலமாகும். உலகின் முதல் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள தலமாகக் கருதப்படுகிறது. சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்த, குடியிருப்புபகுதிகளே இல்லாத ஏகாந்தமான வயல்வெளியில் அமைந்துள்ளது இக்கோயில். இங்கு மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக் காட்சி அளித்தது சிறப்புடையது. இங்கு அமைந்துள்ள நடராஜர் சிலைதான், சிவாலயங்களிலேயே முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை என ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள அழகியகூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். கடந்த டிசம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகியகூத்தர் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Evening-Tamil-News-Paper_51799738408

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 2 மணிக்கு மஹா அபிஷேகம், 5.30 மணிக்கு கோபூஜை, ஆருத்ரா தரிசனம், பிற்பகல் 1.30 மணிக்கு நடன தீபாராதனை, 3 மணிக்கு அழகியகூத்தர் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Leave a Reply