தமிழகத்தை ஆட்டோவில் சென்று சுற்றிப்பார்த்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

touristதமிழகம் முழுவதையும் ஆட்டோவிலேயே சுற்றிபார்க்கும் வெளிநாட்டு குழுவினர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்கா, அர்ஜென்டினா, தென்னாப்ரிக்கா, ஸ்காட்லாந்து, ஸ்லோவேனியா, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் கடந்த 29-ம் தேதி தமிழகத்தை சுற்றிப்பார்க்க சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் வித்தியாசமாக ஆட்டோவிலேயே தமிழகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க விரும்பினார்கள்.

இதற்காக 21 ஆட்டோக்களை ஒப்பந்தம் செய்து புதுச்சேரியிலிருந்து அவர்கள் கிளம்பினார்கள் தஞ்சை, மதுரை ,தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றுலா ஸ்தலங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் திருநெல்வேலி வழியாக நேற்று கன்னியாகுமரி வந்தனர். கன்னியாகுமரியில் இக்குழுவினருக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு தங்கும் விடுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்கள் பயணம் குறித்து அக்குழுவில் இருந்த சுற்றுலாபயணி ஒருவர் கூறும்போது, ஆட்டோவில் தமிழகம் சுற்றுப்பயணம் செய்தது புது அனுபவமாக இருந்தது என்றும் இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் தமிழக சுற்றுலாத் தலங்களின் பெருமையை அறிய இப்பயணம் உதவுவதாகவும் கூறினார்.

கன்னியாகுமரியில் நேற்று அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில் மற்றும் முக்கிய சுற்றுலா பகுதிகளைப் பார்த்து ரசித்தனர். இன்று திருவனந்தபுரம் செல்லும் அவர்கள், அங்கிருந்து சென்னை சென்று பின்னர் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

Leave a Reply