ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அரசியலாக்கி, இழுத்தடிக்க வேண்டாம் என திமுக வழக்கறிஞருக்கு கர்நாடக ஐகோர்ட் சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் குமரேசன் என்ற வழக்கறிஞர் ஆஜராகி. “சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடர்ச்சியான செயல்பாடுகள் ஆட்சேபத்திற்குரிய வகையில் இருக்கிறது. அவருடைய வாதம் திருப்திகரமாக இல்லை” என்று வாதம் செய்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, “பவானி சிங் கர்நாடக அரசின் உத்தரவின் பேரிலேயே வழக்கில் ஆஜராகியுள்ளார். விசாரணை நியாயமான முறையிலேயே நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையை 3 மாத காலத்திற்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது நினைவிருக்கிறதல்லவா? மனு விசாரணையை அரசியலாக்கி, இழுத்தடித்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 345-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.