இலங்கையில் அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றரை கோடி வாக்காளர்கள் இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதிபர் தேர்தலை ஒட்டி தலைநகர் கொழும்பு உள்பட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதிபர் தேர்தலை சர்வதேச பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக சுமார் இரண்டு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை தேர்தல் முடிந்ததும் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு நாளை காலைக்குள் புதிய அதிபர் யார் என்பது தெரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே, ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கேவை குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதால் இரண்டாவது முறை போட்டியிட்டு பொன்சேகாவை அபாரமான வித்தியாசத்தில் தோற்கடித்தார். மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் தற்போது போட்டியிடுகிறார்.
ராஜபக்சேவை எதிர்த்து, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா ஸ்ரீசேனா போட்டியிடுகிறார். இலங்கையில் கடந்த 1978 ஆம் ஆண்டு அதிபர் பதவி தேர்தலுக்கு பின்னர் இந்தத் தேர்தல்தான் மிகக் கடுமையான போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.