முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது தாயார் தயாளு அம்மாவை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். அழகிரி – ஸ்டாலின் சகோதரர்களின் இடையே சமரசம் ஏற்படுத்த தயாளு அம்மாள் முயற்சி செய்துள்ளதாகவும், விரைவில் அழகிரி மீண்டும் திமுகவில் சேரவுள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் பரபரப்புடன் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளதாகவும் இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்த முடியாது என்றும், எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும் என்றும் கூறினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்… திருட்டை ஒழிக்க முடியாது. தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் மீண்டும் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ” திருந்த வேண்டியது தி.மு.க. அல்ல. அழகிரிதான் என தி.மு.க. தரப்பில் இருந்து அழகிரிக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. அழகிரியின் பேட்டியினால் கருணாநிதியும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு நேற்று திடீரென சென்ற மு.க.அழகிரி, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருணாநிதி மகள் செல்வியும் ஸ்டாலின் மனைவி துர்காவும் திடீரென சந்தித்து அழகிரி-ஸ்டாலின் சமரசம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புகள் மு.க. அழகிரி – மு.க. ஸ்டாலின் இடையே சமரசம் ஏற்படுத்தும் என்று கருணாநிதியின் குடும்பத்தினர்களும், திமுக தொண்டர்களும் நம்புவதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.