லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை வீடியோக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களுடன் புகார் செய்ய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், வாட்ஸ் அப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்திலும் இந்த முறையை கொண்டு வர, ஆலோசனை நடக்கிறது.
நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனம் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, கடந்த புத்தாண்டு தினத்தில் இருந்து புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி என்.எல்.சி., நிறுவன லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரி ஷிவ்ராஜ் சிங், தனது மொபைல் போன் எண் உள்ளிட்ட இரண்டு மொபைல் போன் எண்களை அறிவித்துள்ளார். 94861 50325, 94861 50326 ஆகிய அந்த இரண்டு எண்களிலும் ’வாட்ஸ் அப்’ சமூக வலைத்தள தகவல் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் சட்டத்துக்கு புறம்பாக பணமோ, பரிசோ, அன்பளிப்போ கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், உடனே அதுபற்றி புகைப்படம், வீடியோ அல்லது ஏதாவது ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் பெயர், மொபைல்போன் எண் மற்றும் அவரது தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் ஷிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு என்.எல்.சி., தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையை, தமிழக மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வலுத்துள்ளது.