இந்தியாவில் 4.2 கோடி மக்கள் தைராய்டு கோளாறினால் அவதிப்பட்டு கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும். இதன் முக்கிய வேலை தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும். இந்த ஹார்மோன்கள் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுகிறது. உடல் வெப்பநிலையை மேம்படுத்துகிறது. உடல் உறுப்புகளுக்கு அவற்றின் செயல்பாட்டில் துணை புரிகிறது. மொத்தத்தில் உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை பாதிக்கிறது. தைராய்டு சுரப்பியின் அழற்சி உள்ளிட்ட சில அம்சங்கள் தைராய்டு கோளாறுகளுக்கு காரணமாகிறது.
50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஏற்கனவே தைராய்டு பாதித்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை பாதிக்கும் மருந்துகள் ஆகியவையும் தைராய்டு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை(ஹைபோ தைராய்டிஸம்) ஏற்பட்டிருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை (ஹைபர் தைராய்டிஸம்) ஏற்பட்டிருக்கலாம்.ஹைபோ தைராய்டிஸத்தின் அறிகுறிகள், மனச்சோர்வு, விவரிக்க முடியாத எடை கூடுதல், களைப்பு, முடி உதிர்தல், வறண்ட சருமம், அதிக கொலஸ்ட்ரால், ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை அல்லது கருத்தரித்தலில் சிக்கல். கால்களில் வீக்கம் ஆகியவை.
ஹைபர் தைராய்டிஸத்தின் அறிகுறிகள், அதிகப்படியாக மலம் கழித்தல், எடை இழப்பு, நடுக்கம், தொடர்ந்து தொண்டை வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், விரைவான இதயத்துடிப்பு, வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பத உள்ளங்கை, தூங்குவதில் சிரமம் ஆகியவை. இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும். பெரும்பாலான தைராய்டு கோளாறு களை மருந்துகள் கொண்டு எளிதில் கட்டுப்படுத்தலாம்.
உணவு திட்டம் தைராய்டு நோயை பாதிப்பதில்லை. கோதுமை, அரிசி, சோளம், ஆப்பிள் ஆகிய தானியங்கள், ஆரஞ்சு, திராட்சை ஆகிய பழங்கள், கீரை வகைகள், மீன், ஆலிவ் எண்ணெய்,தாவர எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான உணவு. இது ஒட்டுமொத்த நலனுக்கு நன்கு உதவும். இவற்றை சரியாக உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இத்தகைய ஆரோக்கிய பராமரிப்புகள் தைராய்டு கோளாறுகளை சரி செய்யும் மருந்துகளோடு பக்கபலமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.