வீட்டு தூய்மைக்கு எளிய வழிகள்..!

200257917-001

வீட்டை தூய்மையாக வைத்திருக்க கூடுதல் கவனம் செலுத்தினாலும் சில மணி நேரங்களில் தூசிகள் சேர்ந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எனினும் நாம் பராமரிப்பதை பொருத்தே குப்பைகள் சேராது வீட்டு தூய்மை பளிச்சிடும். அதில் சிறிது கவனக்குறைவாக செயல்பட்டாலும் துர்நாற்றம் வீசி, வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் வீட்டை தூய்மையாக வைத்திருக்க கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை பார்ப்போம்.

* வீட்டில் சேரும் குப்பைகளே தூய்மைக்கு முதல் எதிரி. அதனால் குப்பைகளை சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக குப்பைகள் போடுவதற்கான கூடையில் குப்பைகளை சேர விடக்கூடாது. அந்த கூடையின் சுற்றுப்பகுதி காற்றோட்டம் சூழ்ந்த வடிவமைப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் அதில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசாது.

* குப்பை தொட்டியின் மேல்புறம் மூடியுடன் கூடியதாக இருக்க வேண்டும். அவை திறந்து இருந்தாலும் துர்நாற்றம் வீச வழி வகுத்து விடும். பூச்சிகள் படையெடுத்து குப்பைகளை ஆக்கிரமித்து விடும். அதனால் நோய் பரப்ப வித்திடும் இடமாக குப்பை தொட்டி மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுவது நல்லது. தினமும் இரண்டு முறையாவது குப்பைகளை அப்புறப்படுத்துவது நலம்.

* குப்பைகள் அதிகம் சேரும் இடம் சமையல் அறையாக தான் இருக்கும். காய்கறி கழிவுகள் அதிக அளவில் சேரும். அவற்றை குப்பை தொட்டியில் கொட்டுவதை விட வீட்டு தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்த சாத்தியம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே தனி தொட்டியில் எளிதில் மக்கும், மக்காத கழிவுகளை தரம் பிரித்து உரமாக மாற்ற வேண்டும்.

* சமையல் செய்து முடித்தவுடன் சமையல் அறையை உடனே சுத்தம் செய்து விட வேண்டும். சாப்பிட்டதும் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி விடுவது வேலை சுமையை குறைக்கும். சமையல் அறையும் தூய்மையாக காட்சி அளிக்கும்.

* வீட்டில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய அறைகளான குளியல், கழிவறைகளை பராமரிப்பதை பொறுத்தே வீட்டு சுத்தம் வெளிப்படும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். ஆகையால் அடிக்கடி சுத்தம் செய்து வர வேண்டும். அறைக்குள் காற்றுடன் கலந்து நறுமணம் ஏற்படுத்தும் ’ஏர் பிரஷனர்களை’வைப்பது துர்நாற்றத்தை குறைக்கும். அந்த அறைகளை சுத்தப்படுத்தும் பொருட்கள் வாசனை கலந்து இருப்பது அறைக்குள் நறுமணம் வீச செய்யும்.

* குளியல், கழிப்பறைகளில் ஈரப்பதம் செறிந்து இருக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அவை துர்நாற்றம் தோன்ற வித்திட்டு விடும் என்பதால் நீர் தேங்காமல் உடனுக்குடன் துடைத்து விட வேண்டும். அறையை பயன்படுத்திய பின் உடனே மூடி வைப்பது அந்த அறையின் வாசம் மற்ற அறைக்குள் பரவுவதை தவிர்க்கும்.

* வீட்டில் காற்றோட்டம் சூழ்ந்து இருந்தாலே துர்நாற்றம் பரவினாலும் அவை உடனே வெளியேறிவிடும். சூரிய வெளிச்சமும் துர்நாற்றத்தை விரட்டி அடித்து விடும். ஆகவே அதற்கு வசதியாக ஜன்னல்கள் காலை, மாலை பொழுதிலாவது திறந்து இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து வந்தாலே வீட்டு தூய்மை மேம்படும்.

Leave a Reply