திண்டுக்கல்: குருமுனி எனப்புகழ் பெற்ற அகத்திய மகரிஷிக்கு ஜெயந்திவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் திண்டுக்கல் அருகே சிறுமலை வெள்ளிமலை அடிவார தியானப்பாறை அருகில் எழுந்தருளியுள்ள அகத்திய மகரிஷிக்கு அவரது ஜென்ம நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நட்சத்திர 3 ம் பாதத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் கடந்த வியாழனன்று குருபூஜை கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி காலை 9 மணிக்கு மகா யாகமும், தொடர்ந்து சப்தகன்னிபூஜையும் நடந்தது. அதன் பின் 1008 அஷ்ட அதிக அகங்களால் ஆழி வெண் சங்கில் பன்னீர் வைத்து பூஜித்து, அதை பக்தர்கள் தங்களது கரங்களாலேயே அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சிறப்பாகும். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு, காலையிலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதாக்குழுவும், திண்டுக்கல் ஸ்ரீ அகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்டும் சிறப்பாக செய்திருந்தது.