இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ராணுவ புரட்சி நடத்த முயற்சி செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கையின் புதிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, தோல்வியை ஏற்க முடியாமல் ராஜபக்சே ராணுவத்தின் மூலம் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயற்சி செய்ததாகவும், ஆனால் இதற்கு இலங்கை பிரதமர் மற்றும் அட்டர்னி ஜெனரல் மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதேபோல், தலைமை தேர்தல் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் ராஜபக்சே முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் புதியஅதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனாவின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ”புதிய அரசு தனது முதல் வேலையாக ராஜபக்சே ராணுவ புரட்சிக்கு முயன்றது மற்றும் சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்படும்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே பி.பி.சி. வானொலி அளித்த பேட்டியில், ”ராஜபக்சே மீது இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறுவது சிலருடைய வழக்கம். அதைத்தான் அவர்கள் தற்போது செய்து இருக்கிறார்கள். ராஜபச்சே ராணுவ புரட்சிக்கு முயன்றதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதுபோன்ற முயற்சி எதிலும் ராஜபக்சே ஈடுபடவில்லை” என்று கூறியுள்ளார்.