முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் டிஜிபி ஒருவரை வேட்பாளராக அறிவிக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா இழந்தார். அதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு ,அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் ஜெயலலிதா இல்லாவிட்டாலும், மக்கள் தங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
எனவே ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக போட்டியிட வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு , ஓய்வு பெற்ற டிஜிபி ஒருவரின் பெயரை அதிமுக தலைமை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதியில் யாரை நிறுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்பது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தெரியும் என்றும் அவர் நிறுத்தும் வேட்பாளரை நாங்கள் வெற்றி பெறச் செய்ய உழைப்போம் என்கிறது திருச்சி அதிமுக வட்டாரங்கள்.