கணினி வேலை செய்கிறீர்களா, ஜாக்கிரதை!

computer_man_2274748f

கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.

நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது?

கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தா லும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.

பார்க்கும் விதம்

பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது” என்கிறார் அபினவா மருத்துவமனையின் தலைமை கண் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

20-20-20

இதற்குத் தீர்வு என்ன? 20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். “இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்” என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.

ஏசி பற்றி யோசி

இது மட்டுமில்லாமல், இன்று பெரும்பாலான அலுவலகங்கள் செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் இயங்குவதால் சுற்றுப்புறக் காற்றைக் காட்டிலும் ஏசி அறையிலிருக்கும் காற்று வறண்ட தன்மையுடன் இருக்கும். இதனாலும் கண்கள் வறண்டுபோகும். “இப்படி இருக்கையில், நீங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவது ரொம்பவும் அவசியம்.

அதிலும் 20 நிமிடத்துக்கு ஒரு முறை மெதுவாக 10 தடவை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஈரப்பதம் கூடும், கண் தசையின் அழுத்தம் குறையும்” என்பது டாக்டர் எஸ்.காயத்ரியின் அறிவுரை. கண்கள் உலர்ந்து போவதாக உணர்ந்தால், ஒரு நாளில் இரண்டு முறை கண்கள் மீது தண்ணீரை அடித்துக் கழுவுவது நல்லது.

விழியின் நண்பனாக

கணினியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் சருமம், கண்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவர் என்றால் ஒளியைப் பிரதிபலிக்காத லென்ஸைப் பயன்படுத்துங்கள். அதேபோல, காண்டாக்ட் லென்ஸை விடவும் மூக்குக் கண்ணாடி நல்லது. ஏனென்றால், கண்ணில் ஈரப்பதம் குறைந்துபோனால் காண்டாக்ட் லென்ஸ் மேலும் பல அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

வேலை சூழல்

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற ஒளி அமைப்பு கண்களைப் பாதிக்கும். கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையம் (Godrej Interio Ergonomics Cell) நடத்திய ஆய்வின் முடிவுகள் கூறுவதாவது: 68 சதவீதம் அலுவலகங்கள் சீரற்ற ஒளி அமைப்புடன் இயங்குகின்றன.

அவற்றில் 58 சதவீதம் போதுமான வெளிச்சம் இல்லாமலும், 42 சதவீதம் அதிகப்படியான ஒளியுடனும் இருக்கின்றன. “240 முதல் 400 லக்ஸ் அளவிலான ஒளி அமைப்புதான் கணினி அலுவலகத்துக்குச் சரியான ஒளி அமைப்பு” என்கிறார் கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையத்தின் தலைவரான சாஸ்த்ரி.

எங்கே உட்கார வேண்டும்

நாற்காலி அமைப்பும் மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ். கணினி வைக்கப்பட்டிருக்கும் மேஜையும், நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலியும் சவுகரியத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது. கணினித் திரையின் மேல்புறம் உங்கள் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது பார்வையிலிருந்து 10 முதல் 15 டிகிரி வரை கீழே இருத்தல் நல்லது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 20 முதல் 24 அங்குலம் தொலைவில் மானிட்டரை வைப்பதும் முக்கியம்.

எல்.சி.டி. நல்லது

அதிக ரெசல்யூஷன் கொண்ட, ஒளியைப் பிரதிபலிக்காத எல்.சி.டி. (L.C.D.) திரைகளைப் பயன்படுத்துவது அவசியம். திரையின் அளவு குறைந்தபட்சம் 19 அங்குலம்வரை இருப்பதும், காண்ட்ராஸ்ட் கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் பார்வைக்குச் சவுகரியமாக இருப்பதும் முக்கியம்.

கணினித் திரையின் பின்புறத்தில் ஜன்னல் இல்லாமல் பக்கவாட்டில் இருப்பதும் நல்லது. சுவரின் நிறம் முதற்கொண்டு கண்களைக் கூசச் செய்யும் ஒளிவீச்சை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். “ஒருவருக்கு நல்ல பார்வைத் திறன் இருந்தாலும், கணினியை நோக்கிப் பார்வையைக் குவிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவர்கள் சரியான கண்ணாடியைப் பரிந்துரைத்துக் கண்களைப் பாதுகாப்பார்கள்” என்கிறார் டாக்டர் ரமேஷ். வாழ்க்கை முழுக்க நமக்கு ஒளியைத் தரும் கண்களை அலட்சியம் செய்யலாமா?

Leave a Reply