மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக, திமுக அல்லாத பிற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
நரேந்திர மோடியிடம் ஊழலற்ற நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்த்து இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், தற்போது மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைப்பாவையாக இயங்குகிறார். இதனை நிறுத்தாவிடில் மிகவேகமாக மக்கள் செல்வாக்கை அவர் இழந்துவிடுவார்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மாற்றாக பா.ஜ.க. விளங்கும் என அக்கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர். இது கற்பனையானது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. திமுக, அதிமுக இடம்பெறாத ஒரு மாற்று அணியை உருவாக்க முயன்று வருகிறோம். அந்த மாற்று அணிதான் அதிமுகவுக்கு எதிரணியாக விளங்கும்.
தமிழகத்தில் ஊழல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கல்வித் துறையில் ஊழல் பெருகிவிட்டது. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஊழலை ஒழிக்கவும் மக்கள் நலனை மட்டும் கருதியும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க., த.மா.கா, மதிமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணி அரசை ஏற்படுத்த முயல வேண்டும்’ என்ரு கூறினார்.