மோடியை புகழ்ந்து பேசுவதா? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காங்கிரஸ் அதிருப்தி.

dattuசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தலைவர், சிறந்த மனிதர், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். நாட்டில் நல்ல நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுகிறார்’ என்று கூறினார்.

இவ்வாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து புகழ்ந்து பேசியதற்கு, காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுடில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா நேற்று கூறியதாவது:

நமது அரசமைப்பு கட்டமைப்பின் முக்கியப் பகுதியாக சுப்ரீம் கோர்ட் திகழ்கிறது. சுதந்திரமான நீதித் துறை, நம்பகத்தன்மை ஆகியவையே நீதித் துறையின் முக்கிய அம்சங்களாகும்.

நாம் மிகவும் மதிக்கக்கூடியவரான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஆட்சி நிர்வாகம் தொடர்பான தனது தனிப்பட்ட கருத்துகளை, வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது நல்லது. நாட்டின் தலைமை நீதிபதியான அவர், சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தனது தனிப்பட்ட கருத்தை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வதுதான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு சிறந்ததாகும்’ என்று கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியபோது, “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி குறித்து தனது தனிப்பட்ட கருத்து, மதிப்பீட்டை தெரிவிக்கும் உரிமை உள்ளது. அவரது தனிப்பட்ட கருத்தால், நீதித்துறையின் பாரபட்சமில்லாத நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்புகிறேன்’ என கூறியிருந்தார்.

Leave a Reply