சென்னை: டயர், டியூப், பிளாஸ்டிக் எரிக்காமல், பொதுமக்கள் புகையில்லாத போகி கொண்டாட வேண்டும்’ என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது. ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் நடந்து வருகிறது. தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல், 15ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதன் முதல் நாளான போகி அன்று அதிகாலையில், பழைய பொருட்களை, குப்பையோடு சேர்த்து எரிப்பது வழக்கம்.இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்காமல், புகையில்லாத போகி கொண்டாட வேண்டும்’ என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.
*டயர், டியூப்கள், பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்; அதனால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகும் நிலை ஏற்படுகிறது.*புகையால் விமானம், பேருந்து போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுங்கள்; இல்லாவிட்டால், குப்பை சேகரிக்க வருவோரிடம் கொடுங்கள் என, வாரியம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக, 20 ஆட்டோக்கள் மூலம் விழி ப்புணர்வு பிரசாரம், சென்னை மாசுக் கட்டுப்பட்டு வாரிய அலுவலகத்தில், நேற்று துவக்கப்பட்டது. புகையில்லாத போகி கொண்டாடுவோம்’ என, மாணவர்கள், ஆசிரியர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.