ராஜபாளையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருப்பதுதான். விசாரணையில் தெரியவந்த இந்த உண்மையை அடுத்து தமிழகம் முழுக்க காவல்துறை நடத்திய ரெய்டில் 150 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 18 உயிரிழப்புகள் ஏற்பட்டபின் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இப்போதுதான் ஞானக்கண் திறந்துள்ளது. தமிழகம் முழுவதும் கைது படலம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் இறந்தவர்கள், வெளிநாடுகளில் பணி செய்பவர்கள் நீங்கலாக தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை விட மருத்துவம் பயிலாமல் மருத்துவத் தொழில் பார்க்கும் போலி மருத்துவர்கள் அதிகம் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். குறிப்பாக தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் உண்மையானவரா?
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிகளவில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கலெக்டர் தரேஸ் அகமது உத்தரவின்பேரில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா மேற்பார்வையில் போலி மருத்துவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், ஒரே நாளில் 4 பெண்கள் உள்ளிட்ட 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவாச்சூரில் அண்ணாமலை, மேலப்புலியூரில் கோவிந்தராஜு, குரும்பலூரில் செல்வக்குமார், கார்த்திக், கை.களத்தூரில் வீரகனூரைச் சேர்ந்த ராஜு, காந்தி நகரைச் சேர்ந்த சேகர், குன்னம் அருகே உள்ள பேரளியில் துறையூர் பச்சைபெருமாள்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், என பிடிபட்ட இவர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 வது படிப்பும் அதிகபட்சமாக டிபார்ம், வரை மட்டுமே படித்தவர்கள். மருத்துவர்கள் என பெயர்ப் பலகையோடு கிளினிக் அமைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை கோயில் தெருவில் மெடிக்கல் ஷாப் வைத்திருந்த கனகசபை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரைபோல், தென்னூர் கிராமத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் கடலூர் ராமாவரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
கரூரை கலக்கும் போலி மருத்துவர்கள்
கரூர் மாவட்டம் தோகைமலை வேதாசலபுரத்தை சேர்ந்தவர் கணபதி. டி.எம்.எல்டி எனும் ரத்த பரிசோதனைக்கான படிப்பு படித்துள்ள இவர் மெடிக்கல் கடை வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரைப் போல் தோகைமலையில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு பயின்ற ஜியாவுதீன் என்பவர் கடை வீதியில் உள்ள தனது வீட்டில் நோயாளிகளுக்கு ஆங்கில முறைப்படி ஊசிகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தார், குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆனதை அடுத்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்
தேமுதிக வேட்பாளரின் மனைவி போலி டாக்டர்
சேலம் மாவட்டத்தில் நடந்த ஆய்வில் கடந்த 12 ந்தேதி ஆத்தூர், தலைவாசல் பகுதியில், 7 போலி டாக்டர்களை கைது செய்தனர்.
அதில் ஆத்தூர் வ.உ.சி., நகரைச் சேர்ந்த ராமநாதன், , முத்துக்குமார், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் மருத்துவமனை நடத்தும் சுரேஷ், தலைவாசல் அருகே மருந்து கடை நடத்திய ராமர், கண்ணுசாமி, ஆகியோரையும், ஆத்தூர் அருகே, 15 வருடங்களாக போலியாக மருத்துவம் பார்த்து வந்த ரவிச்சந்திரன், ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டையில் பூபதி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ராமநாதன், பிளஸ் 2 வரையும், மற்றவர்கள் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்கள் என தெரியவர விசாரணை அதிகாரிகள் பதறிப்போனார்கள்.
இதில் கைது செய்யப்பட்ட கண்ணுசாமியின் மனைவி கீதா, 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க சார்பில் கெங்கவல்லி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர்.
டெங்கு காய்ச்சலுக்கு பிறகு பிடிக்கப்பட்ட 10 போலி டாக்டர்கள்
ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்க, இதுகுறித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விசாரணையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் முதலில் தங்கள் பகுதிகளில் கடைவிரித்திருந்த இந்த போலிகளிடம்தான் முதலில் சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதன்பிறகே அதிரடி நடவடிக்கை எடுத்து காவல்துறை வளைத்துப் பிடித்தது இந்த பத்தாம் கிளாஸ் மருத்துவர்களை.
கோவிலூரைச் சேர்ந்த சிவன்ராஜா , அருப்புக்கோட்டை டி.வி.ஆர்.ஸ்டெல்லா விஸ்வநத்தத்தைச் சேர்ந்த முத்துச்செல்வி, மாரீஸ்வரன் , சிவகாசி போஸ் காலனி பேபிடெல்பி செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த ஆனந் தன் உள்ளிட்டோரையும் விருதுநகர் மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர்
போலிகளை அடையாளம் காண
போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம், மருத்துவம் படித்து மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள், நோயாளி களுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தங்களுடைய பெயர், படிப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் இவற்றை குறிப்பிட வேண்டும் என்றும் முறையாக மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்ப்பது கடுமையான குற்றம் என மருத்துவர்களுக்கான சட்டம் அறிவுறுத்துகிறது.
அதனால் தங்களுக்கு தரப்படும் மருந்து சீட்டில் இந்த தகவல்கள் இல்லையென்றால் நோயாளி உஷாராகி விடவேண்டும். தங்களைக் காத்துக்கொள்வதோடு அவர்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த நடை முறையை மதிக்காமல் தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலி டாக்டர் செய்யும் தவறுகளால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கச் செய்கிறது. நீங்கள் சிகிச்சைக்கு போகும்போது, அந்த டாக்டர் உண்மையான டாக்டரா இல்லை போலியான டாக்டரா என சந்தேகம் எழுந்தால் காவல்நிலையத்தில் தகவல் அளியுங்கள்.
அங்கு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் தாமதிக்காமல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், எண்.914, பூந்த மல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்கிற முகவரிக்கு எழுத்து மூலம் புகாரும், 044-26265678 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இல்லயெனில் அந்தந்த மாவட்ட மருத்துவதுறை முதன்மை அலுவலருக் கும் புகார் கொடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
போலிகளால் உங்கள் உடம்பு மட்டுமல்ல உயிரும் போகக்கூடும் ஜாக்கிரதை………………