சென்னை: பிப்ரவரி 3 முதல் இந்து ஆன்மிகக் கண்காட்சி
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 7 ஆவது இந்து ஆன்மிகக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்பு, கலாசார பயிற்சி மைய அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியின் முதல் நிகழ்ச்சியாக நேற்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை தொடங்கியது. 25 ரதங்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவ சிலைகள் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட்டன.
ரத யாத்திரையை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஸ்ரீ புத்திதானந்தா மஹராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ரத யாத்திரை புறப்படும் முன் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்பட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுச்சூழல் பராமரித்தல், வனம், வனவிலங்குகள் பாதுகாத்தல், ஜீவராசிகளை பேணுதல், பெண்மையை போற்றுதல், பெற்றோர், ஆசிரியர், பெரியோர்களை வணங்குதல், நாட்டுப்பற்றை வளர்த்தல் ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி ரத யாத்திரை செல்கிறது.
இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளது. இதுதவிர நகரின் முக்கிய பகுதிகளிலும், இதே கருத்தை வலியுறுத்தி இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது. இந்த ரத யாத்திரை மக்களிடையே ஆன்மிக கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.