100 கோடி வாடிக்கையாளர்களை நெருங்குகிறது வாட்ஸ் அப்.

whatsappஇன்னும் ஓராண்டு காலத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுவிடும் என்று  வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனம்வாட்ஸ் அப் நிறுவனத்தை கைப்பற்றியபோது ரூ.100 வாடிக்கையாளர்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்தது. அந்த இலக்கை வாட்ஸ் அப் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 1600 கோடி டாலர் கொடுத்து, மொபைல் ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியபோதே, வாட்ஸ் அப்பின் வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துவிட்டது.

எஸ்.எம்.எஸ். வழிமுறையைக் காட்டிலும் அதிகச் செலவின்றி, ஏன் ஏறத்தாழ எதுவும் இன்றி, செய்திகளை அனுப்ப மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் இதனையே நாடுகின்றனர். இதனால் தான், இந்தியா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளில், எஸ்.எம்.எஸ். பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாட்ஸ் அப் வழியாக, தினந்தோறும் 3,000 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜான் கெளம் அறிவித்துள்ளார்.

பேஸ்புக் இந்நிறுவனத்தை வாங்கிய பின்னர், வாட்ஸ் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 2108 கோடி டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. நிறுவனம் கை மாறிய போது, வாட்ஸ் அப் கொண்டிருந்த பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 45 கோடியாக மட்டுமே இருந்தது. இவர்களில் 70% பேர் மட்டுமே தினந்தோறும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர், மாதந்தோறும் 2.5 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். சென்ற ஏப்ரல் 22 அன்று, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது. பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது. 2013 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 40 கோடியானது. இந்த வேகத்தில் சென்றால், இன்னும் ஓராண்டில் இது 100 கோடியை நிச்சயம் எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இப்போதும், வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனத்தின் கண்காணிப்பில், தனி ஒரு பிரிவாகத்தான் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை இவை ஒவ்வொன்றும் எப்படி கையாள்கின்றன என்று அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரிவு ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply