பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படம் விக்ரம் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை குறித்து மட்டுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஷங்கரின் சொதப்பலான திரைக்கதையால் படம் சுமாராக இருப்பதாக கருத்து நிலவி வரும் நிலையில், இந்த படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த திருநங்கை கேரக்டர் மூலம் தங்கள் இனத்தை அவமதித்து விட்டதாக நேற்று தமிழகத்தின் பல இடங்களில் ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஷங்கரின் உருவப்படத்தை செருப்பால் அடித்த திருநங்கைகள், ஷங்கர் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், ஷங்கர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
திருநங்கைகளின் பிரதிநிதியும், தொலைக்காட்சி காம்பயருமான ரோஸ், இந்த படம் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘ஐ’ படத்தின் திருநங்கை கேரக்டருக்கு நான் தான் முதலில் டப்பிங் குரல் கொடுக்க சென்றிருந்தேன். ஆனால் அதில் ஆபாச வசனங்கள் மற்றும் திருநங்கைகளை கேலி செய்யும் காட்சிகள் அதிகம் இருந்ததால் டப்பிங் செய்ய மறுத்துவிட்டு, ‘ஐ’ படக்குழுவினர்களை எச்சரித்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.
முதலில் திருநங்கைகள் போராட்டம் ‘ஐ’ படத்திற்கு கிடைத்துள்ள இலவச விளம்பரம் என்றுதான் ஷங்கர் தரப்பு நினைத்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை சீரியஸாக செல்வதால் ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.