சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது தவறு என்றும், அவ்வாறு சோதனை நடத்த அவர்களுக்கு யார் அனுமதி அளித்தது? என்றும் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி குமாரசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று பத்தாவது நாளாக நடைபெற்றது. இன்றைய விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதம் செய்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், “ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் அவரது அனுமதியின்றி அவருக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், வீட்டில் இல்லாத போது, அவரின் வீட்டில் எப்படி சோதனை நடத்த முடியும்? அதற்கு யார் அனுமதி கொடுத்தது? சம்பந்தப்பட்டவர் வீட்டில் இருக்கும் போதுதான் சோதனை நடத்த வேண்டும் என்ற விதி கூட தெரியாமல் எப்படி சோதனை நடந்தது” என்று கூறினார்.
இதனை கவனமாக குறித்துக் கொண்ட நீதிபதி குமாரசாமி, சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது, எவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? குற்றம்சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டுதான் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், “லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்றும் கூறினார்.. மேலும் சோதனை நடத்தியபோது, ஜெயலலிதா தரப்பில் பாஸ்கர் என்பவர் வீட்டில் இருந்தார்” என்று விளக்கம் அளித்தார்.