குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒட்டகம் கடித்ததால் பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் கோவிந்த் திரிவேதி என்ற 45வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர் புலாமேனா என்பவர் தனது ஒட்டகத்துடன் வந்து கொண்டிருந்தார். இருவரும் மார்க்கெட் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒட்டகம் கோவிந்த் திரிவேதியின் தலையில் கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புலாமேனா தனது நண்பரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரையும் காலில் கடித்தது.
இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி கோவிந்த் திரிவேதி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஒட்டக உரிமையாளர் புலாமேனாவிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், கோவிந்த் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் அமைதியாக நின்றுகொண்டிருந்த ஒட்டகத்தை சீண்டிக்கொண்டே இருந்ததால் அந்த ஒட்டகம் கடித்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.