மாடித் தோட்டம் ஆரோக்கியம் தருமா?

TN_20150120154416097651விவசாயம் செய்ய ஆசைப்பட்டு மண்ணில் கால் பதிப்பவர்கள் பூச்சி நிர்வாகத்தில் தோற்றுப் போய் விடுகிறார்கள். இவர்களுக்காகவே, மதுரையில் உள்ள நாணல் நண்பர்கள் குழுவும் தமிழ்நாடு உழவர் தொழில்நுட்ப கழகமும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றன.

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்த இவர்கள். இப்போது இதைச் செய்முறையிலும் பயிற்றுவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான காரணத்தை விளக்குகிறார் நாணல் நண்பர்கள் குழுவின் இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் பூபாலன்.

“நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை என்ன விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்ள முடியும் என்பதல்ல பொருளாதார வளர்ச்சி. அதை நாமே விளைவித்துக் கொள்வதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சி. நகரத்து மக்களை நேரடி விவசாயத்துக்கு கொண்டு வருவது உடனடியாக முடியாது. அதனால், மாடித் தோட்டங்களை உருவாக் குவதன் மூலம் அவர்களை விவசாயத்தை நோக்கி ஈர்க்கலாம். இதற்கான பயிற்சி வகுப்புக்களைத்தான் இப்போது நாங்கள் நடத்த ஆரம்பித்திருக்கிறோம்’’ என்கிறார்.

பூச்சி மேலாண்மை

மண் என்பது பல லட்சக் கணக்கான உயிரிகள் அடங்கிய உயிர்மம். மண்ணில் பாக்டிரியா இருந்தால் தான் காய் – கனிகள் விளையும். பூச்சிகள் நமக்கு சீனியர் சிட்டி சன்கள். ஆனால், அவை நமக்கு எதிரிகள் அல்ல. ரசாயன பூச்சிக்கொல்லிகளை வைத்து நாம் பூச்சிகளை அழிக்க நினைக்கிறோம். இதுவரை எத்தனையோ கோடிக் கணக்கான டன் பூச்சிக் கொல்லிகளை இந்த மண்ணுக்குள் பாய்ச்சி இருக்கிறோம். இதனால் மண் தான் விஷமாகி இருக்கிறதே தவிர பூச்சிகள் ஒழிந்த பாடில்லை.

பூச்சிகளில் அசைவப் பூச்சி, சைவப் பூச்சி என இரண்டு வகைகள் உண்டு. சைவப் பூச்சிகள் தான் பயிர்களைத் தின்று சேதத்தை உண்டாக்குகின்றன. இந்தப் பூச்சிகளை உண்டு நமக்கு நன்மை செய்வதற்காக 32 வகையான அசைவப் பூச்சிகள் இருக்கின்றன. இவற்றையும் சேர்த்துத்தான் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயிற்சி முகாமில், அசைவப் பூச்சிகள் எவை எவை என்பதைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இலைகளில் உள்ள மனம், சுவை, நிறம் இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டாலும் சைவப் பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அவைகள் இலைகளைக் கடிக்காமல் இருந்துவிடும். இப்படி ஒவ்வாமை ஏற்படுத்துவதற்காக, ஒடித்தால் பால் வரக்கூடிய தாவரங்கள், கசப்பை ஏற்படுத்தும் தாவரங்கள் இவை இரண்டின் இலைகளையும் எடுத்துக் கசாயம் எடுத்து பூச்சி விரட்டிகளை உருவாக்கலாம். இதற்கான செய்முறையையும் பயிற்சி முகாமில் சொல்லித் தருகிறார்கள்.

காய், கனிகளைப் பயிரிடுவோம்

வீட்டின் மொட்டை மாடியில் 10 சதுர அடி இடம் இருந்தால் போதும் வீட்டுக்குத் தேவையான ஐந்து வகையான காய் – கனிகளைப் பயிரிட முடியும். இதற்காகத் தார் பாயால் ஆன பைகள் சந்தையில் 90 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்தப் பைகளில் மண்ணையும் மக்கும் குப்பைகளையும் நன்மை தரும் நுண் பூஞ்சாலங்களையும் நிரப்பி விட்டால் போதும். வேறு எதும் உரம் தேவையில்லை. ஒரு சதுர அடியில் பயிரிடப்படும் ஒரு செடியானது தொண்ணூறு நாட்களுக்கு ஐந்து கிலோ வரை பலன் தருகிறது. அதன்பிறகு அதே பையில் மாற்றுப் பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடலாம். ஒவ்வொரு முறையும் மண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. முன்பு பயிர் செய்த பயிர்களின் கழிவுகளே உரமாகிவிடும்.

“மாடித் தோட்டங்களால் பெருமை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் இருக்கிறது. நமக்குத் தேவையான நஞ்சில்லா உணவுப் பயிர்களை நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறது. மதுரை மாவட்டம் சோலைப்பட்டியில் நடந்த முதல் பயிற்சி முகாமில் 35 பேர் கலந்து கொண்டார்கள்.

அவர்களில் சிலர் மாடித் தோட்டங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். அடுத்தகட்டமாக இன்னும் விரிவாக இந்த பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார் தமிழ்நாடு உழவர் தொழில்நுட்ப கழகத்தின் இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து.

Leave a Reply