தயாநிதிமாறனின் தனிச்செயலாளர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: சிபிஐ

dayanidhi-maranபி.எஸ்.என்.எல்.லின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன் உள்ளிட்ட மூவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

   முன்னாள் மத்திய அமைச்சர்  தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது,  323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் நிறுவனமான சன் டிவிக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்ம நாதன் மற்றும் சன் டி.வி. நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. போலீசார், சன் டிவியில் உயர் பதவியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், சன் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த புதன் அன்று கைது செய்தனர். பின்னர், இந்த மூவரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தினர்.
 
இதையடுத்து, மூன்று பேரையும் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் .

பின்னர், சி.பி.ஐ. தரப்பில் இந்த மூன்று பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி ராஜேஷ் குமார், சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த காலத்தில், அவரது சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனமான சன் டி.வி.க்கு பி.எஸ்.என்.எல். தொலைபேசி அதி விரைவு இணைப்புகளை சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் கொடுத்து மோசடி பற்றி விசாரித்தோம். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த வழக்கில் கைதான கவுதமன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தனிச் செயலாளர். இவர் இணைப்புகளை முறைகேடாக பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். மற்ற இரண்டு பேரும் தயாநிதி மாறனின் வீட்டுக்கும், சன் டி.வி. அலுவலகத்துக்கும் இடையே கொடுக்கப்பட்ட இணைப்புகளை பராமரித்து வந்ததில் தொடர்புடையவர்கள். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்’ என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் பாசுராம்  வாதிடுகையில், கைதுக்கு பின்னரும் இந்த மூன்று பேரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, கௌதமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ், போலீஸ் காவல் கேட்கும் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.  ஆனால், குற்றம் சாட்டப் பட்டவர்கள் யாரும் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. போலீஸ் காவல் எடுப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவில் முழுமையான தகவல்  இல்லை. இவர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் மனுவில் கூறப்படவில்லை. போலீஸ் காவல் எடுத்த பிறகு, ஆதாரங்களை உருவாக்குவதற்கு சி.பி.ஐ. முயல்கிறது.
 
2004-07ல் நடந்த சம்பவத்திற்கு 2013ஆம் ஆண்டுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போதுதான் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அதனால், தற்போது சி.பி.ஐ. காவல் தேவையில்லை என வாதிட்டார்.

சன் டி.வி. ஊழியர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், எந்த ஆதாரமும் இல்லாமல் சி.பி.ஐ. காவலில் எடுக்க முடியாது. அதனால், சி.பி.ஐ. காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

அப்போது, சி.பி.ஐ. வழக்கறிஞர் பாசுராம், வழக்குக்கு தேவையான விவரங்களை நாங்கள் அளிக்கிறோம். ஆனால், முக்கியமான விவரங்கள், ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீது வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார் .

இந்த வழக்கின் விசாரணையை காண சன் டி.வி. ராஜா, தினகரன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நீதிமன்றத்தில் குவிந்து இருந்தனர்

Leave a Reply