ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குஷ்பு நிறுத்தப்படுவார் என்ற செய்திகள் வெளியாகிய நிலையில் திடீரென அந்த கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் சோர்வில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும், பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்பு நிறுத்தப்படுவார் என காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என காங்கிரஸ் கட்சி கருதுவதால் இந்த தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது.
இந்த தேர்தலில் பணம் கொடுத்து ஜெயிக்கப் போகிறார்கள். இதில் எங்கள் சக்தியை வீணாக்க விரும்பவில்லை. பா.ஜ.க. பணம் தர தயாராக உள்ளது. அவர்களுக்கு நிறைய முதலாளிகள் பணம் தர தயாராக உள்ளனர்.