அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் திடீரென ராஜினாமா செய்து, அதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து பல்டி அடித்து தனது ராஜினாமாவை திரும்ப பெற்றுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானிசிங் கடந்த 23ஆம் தேதி ராஜினாமா செய்ததும் உடனடியாக அவரை சமாதானப்படுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த குணசீலன், சம்பந்தம் மற்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
மேலும் பவானி சிங், “திமுக, சுப்பிரமணியன் சுவாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர்கள் அதிக நெருக்கடி தருவதாகவும், சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லாததாலும், ராஜினாமா செய்ததாக கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி தனக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.65 ஆயிரம் போதாது என்றும் நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் ஊதியமாக தந்தால் மட்டுமே பணியை தொடர முடியும் என்றும், இல்லாவிடில் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழி இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது.
இதன்பின்னர் பேசப்பட்ட சமாதானப்பேச்சுவார்த்தையில் பவானிசிங்கிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1.8 லட்சம் ஊதியம் வழங்க ஒபுக்கொண்டதாகவும் இதையடுத்தே அவர் தனது ராஜினாமாவை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுகவின் வழக்கறிஞர்கள் கருத்து கூறியபோது, “பவானி சிங் பணத்துக்காக ராஜினாமா நாடகத்தை போட்டுள்ளார். இப்போது அவருக்கு சேர வேண்டியதை கொண்டுபோய் சேர்த்ததால் ராஜினாமா செய்யவில்லை என்கிறார். இதுபோல பவானி சிங்கின் பல நாடகங்ளை நிறைய பார்த்துவிட்டோம். தற்போது அவரது ராஜினாமா நாடகம் தொடர்பாக தக்க பாடத்தை அவருக்கு புகட்டுவோம்” என அவர்கள் தெரிவித்தனர்.