எதிர்பார்த்தபடியே சாம்சங் நிறுவனம் குறைந்த விலையிலான இசட் 1 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனையில் சாம்சங் முன்னிலை வகித்தாலும் இந்தப் புதிய போன் அதிலிருந்து விலகி, டைசன் இயங்குதளத்துடன் அறிமுகமாகி இருக்கிறது. ரூ.5,700 விலையில் அறிமுகமாகி இருக்கும் இந்த டைசன் ஸ்மார்ட் போன் அதி வேக பூட் டைம் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை காமிரா மற்றும் இரட்டை சிம் வசதியையும் கொண்டிருக்கிறது. பாலிவுட் பாடல்களை வழங்குவதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.
சாம்சங் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டிவிகளில் டைசன் இயங்கு தளத்தைப் பயன்படுத்தினாலும் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. முதலில் ரஷ்யா மற்றும் ஜப்பானில் தான் டைசன் போனை அறிமுகம் செய்வதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா தான் பொருத்தமான சந்தை என இங்கு வெள்ளோட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் சார்பைக் குறைத்துக்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தவிர மூன்றாவதாக எந்த இயங்குதளமும் ஸ்மார்ட் போன் சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திடாத நிலையில் சாம்சங்கின் டைசன் உத்தி கைகொடுக்குமா என்பது சுவாரஸ்யமான கேள்வி.