இராமேஸ்வரம் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் கல்மண்டபம். சிருங்கேரி மடம் கட்டி தருகிறது.

rameswaram templeஇந்தியாவில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் முக்கியமான புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் கோவில் அம்மன் சன்னதியின் வாசல் முன்பு ரூ.1 கோடி மதிப்பில் கருங்கல் மண்டபம் ஒன்று விரைவில் கட்டப்பட உள்ளது.

ராமேசுவரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தின் முன்பு ஓடுகளால் வேயப்பட்ட கொட்டகை ஒன்று இருந்தது.

இதற்கு பதிலாக அதே இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கருங்கற்களினால் ஆன மண்டபம் கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மண்டபத்தை கட்டி தருவதற்கு சிருங்கேரி மடம் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பெங்களூரில் இருந்து ஏராளமான கருங்கற்கள் லாரி மூலம் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டு தெற்கு கோபுரம் அருகில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபம் முன்பு வாசலில் கருங்கற்களினால் ஆன புதிய மண்டபம் கட்டுவதற்காக ஓடுகளால் ஆன கூடாரம் மற்றும் ஓடுகள், கம்புகள் ஆகியவை அகற்றப்பட்டது.

இதுபற்றி கோவிலின் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது:–

ராமேசுவரம் கோவிலின் அம்மன் சன்னதி வாசல் முன்பு ரூ.1 கோடி மதிப்பில் கருங்கற்களினால் ஆன புதிய மண்டபம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தற்போது அமைந்துள்ள ஓடுகளால் கூரைவேயப்பட்ட கூடாரம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின் விரைவில் புதிய மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த மண்டபத்தின் பணிகளை கும்பாபிஷேகத்திற்கு முன்னதாகவே முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply