பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் பாஜக தலைமை உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கிரண்பேடி தனது வேட்பு மனுவில், உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரண் பேடி, உதய் பார்க் பகுதியை குறிப்பிட்டு, டி.இசட்.டி 1656909 என்ற எண் கொண்ட ஒரு அடையாள அட்டையும், தால்கதோரா சந்து பகுதியை குறிப்பிட்டு எஸ்.ஜே.இ 0047969 எண்ணுடன் வேறு ஒரு அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக இருக்கும் ஒருவர் இரண்டு அடையாள அட்டை வைத்திருப்பது தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”கிரண் பேடி தனது 2 அடையாள அட்டைகளில் ஒன்றினை ரத்து செய்ய விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.