சினிமா படங்கள் தணிக்கை செய்யப்படுவது போல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை செய்யப்படுமா? என்பது குறித்த வழக்கு ஒன்றில் சென்னை நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகார் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு ஒன்றில், ‘தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசங்கள் பெருகி விட்டதாகவும், இந்த நிகழ்ச்சிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தும் அச்சம் இருப்பதால், சினிமா படங்களை போல் தனியார் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த முக்கிய வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பென்ச் மத்திய அரசுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவில் நீதிபதில் கூறியிருப்பதாவது: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்வதற்கான சட்ட மசோதா காலாவதியாகி விட்டது என்றும் அந்த சட்ட மசோதாவை புதுபிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
வளர்ந்து விட்ட அறிவியல் உலகில், தொழில் நுட்ப வசதிகளை தடுக்க முடியாது. இது சமூகம் சார்ந்த பிரச்னை என்பதால், இந்த விஷயத்தில் நீதிமன்றம் நேரிடையாக தலையிட முடியாது.
எனவே, இந்த விவகாரத்தில், மத்திய அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் சேர்ந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.