மனதை உடனடியாக லேசாக்குவதற்கு இருக்கும் எளிமையான வழிகளில் ஒன்று ஊஞ்சல். குழந்தைகள் விளையாடுவதற்கானது மட்டுமல்ல ஊஞ்சல். பெரியவர்களும் இளைப்பாறுவதற்கு ஊஞ்சல் உகந்தது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஊஞ்சலாடுவது சிறந்த வழி. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பது பாரம்பரியமான வழக்கம்தான். அந்தக் காலத்தில் வீட்டின் கூடத்தில் மர ஊஞ்சல் அமைத்திருப்பார்கள்.

அந்த ஊஞ்சலில் ஆடினால், அது கூடத்தில் இருக்கும் நிலைக்கண்ணாடியில் தெரியுமாறு வடிவமைத்திருப்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் நவீன வீடுகளுக்கேற்ற நவீன ஊஞ்சல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக காப்பி குடிப்பதற்கும், மாலையில் பிடித்த புத்தகம் படிப்பதற்கும் ஊஞ்சலைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது. வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பதற்கான சில வழிகள்:

மர ஊஞ்சல்

பாரம்பரியமான வீட்டு அலங்காரத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது மர ஊஞ்சல்தான். இந்த மர ஊஞ்சலை வீட்டின் வரவேற்பறையிலும், பால்கனியிலும் அமைக்கலாம். ஆனால், இந்த ஊஞ்சலை அமைப்பதற்குச் சற்றுப் பெரிய இடம் தேவைப்படும். வரவேற்பறையில் ஊஞ்சலைப் பொருத்தினால் ஜன்னலுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் காற்றோட்டம் கிடைக்கும்.

மூங்கில் ஊஞ்சல்

எல்லோராலும் நினைத்தவுடன் வாங்கக்கூடியது இந்த மூங்கில் ஊஞ்சல்தான். இந்த மூங்கில் ஊஞ்சல் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. மூங்கில் ஊஞ்சல் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எளிமையானது. இதை அமைப்பதற்குப் பெரிதாக எந்தத் திட்டமிடலும், இடவசதியும் தேவையில்லை. பால்கனி, படுக்கையறை எனப் பிடித்த இடத்தில் இதைப் பொருத்திக்கொள்ளலாம்.

குமிழி ஊஞ்சல்

பார்ப்பதற்கு குமிழி போன்ற தோற்றத்துடன் இருக்கும் இந்த ஊஞ்சல் நவீனத்தை விரும்புபவர்களுக்குப் பிடிக்கும். வரவேற்பறை, படிக்கும் அறை, படுக்கையறை, பால்கனி என எங்கே வேண்டுமானாலும் இதை வைத்துக்கொள்ளலாம். நாற்காலிகளும், சோஃபாக்களும் சலித்துவிட்டால் இளைப்பாறுவதற்கு ஏற்றதாக இந்தக் குமிழி ஊஞ்சல் இருக்கும்.

தூங்கும் தொட்டில்

பொதுவாகத் தோட்டத்திலும், பால்கனியிலும் அமைக்கப்படும் இந்தத் தூங்கும் தொட்டிலை (hammock) இப்போது வீட்டுக்குள்ளும் அமைக்கத் தொடங்கயிருக்கிறார்கள். இதை வரவேற்பறை, படுக்கையறை, பால்கனி என எங்கு வேண்டுமானாலும் அமைக்கலால். ஆனால், இவற்றைப் பொருத்துவதற்கு ஏற்றமாதிரி வீட்டின் உத்தரமும், தூண்களும் இருக்க வேண்டும். மதிய நேரங்களில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு இந்தத் தூங்கும் தொட்டில் ஏற்றதாக இருக்கும். வீட்டின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் விதவிதமாக இவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

உலோக ஊஞ்சல்

ஊஞ்சலில் நன்றாக ஆடவேண்டும் என்று விரும்பும் பெரியவர்களுக்கு ஏற்றது உலோக ஊஞ்சல்தான். இதை வீட்டில் அமைப்பதும் எளிமையானதுதான். குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு உலோக ஊஞ்சல் உதவிகரமாக இருக்கும். இளைப்பாறல் மட்டுமல்லாமல் குதூகலத்துடன் ஊஞ்சலாடுவதற்கு உலோக ஊஞ்சல் பயன்படும்.

படுக்கை ஊஞ்சல்

படுக்கை அமைப்புடன் இருக்கும் பிரத்யேகமான ஊஞ்சலும் இருக்கிறது. ஆனால், இதை வைப்பதற்கு இடவசதி தேவைப்படும். இந்தப் படுக்கை ஊஞ்சலை பால்கனியில் வைத்தால் போர்வை, தலையணையுடன் இயற்கையான காற்றோட்டத்துடன் தூங்கலாம்.