கடந்த 7ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தை தீவிரவாதிகள் மிகக்கடுமையாக தாக்கியதில் 12 பேர் பலியான செய்தி உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாரீஸ் நகரில் உள்ள 8 வயது சிறுவன் ஒருவன் ஆதரவு தெரிவித்திருப்பது அதைவிட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் உள்ள ஒரு பள்ளியில் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு நிமிட மெளன அஞ்சலி நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் 8 வயது சிறுவன் மட்டும் பங்கு பெற முடியாது என்று கூறியுள்ளான்.
அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அவனிடம் பேசியபோது, அவன் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த சிறுவனிடமும், சிறுவனின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்யாத பாரீஸ் நகர போலீஸார், சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளிக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.