ஜெயந்தி நடராஜன் விலகலால் காங்கிரஸ் தூய்மை அடைந்தது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

evks elangovanகாங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதற்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு இன்னொருவரும் தனது மகனுடன் சேர்ந்து காங்கிரஸை விட்டுவிலகினால் காங்கிரஸுக்கு விமோசனம் கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியது தொடர்பாக இன்று ஒருஅறிக்கையை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘”கங்கை தூய்மைப்படுகிறதோ இல்லையோ, தாங்கள் (ஜெயந்தி நடராஜன்) காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பலமடங்கு தூய்மைப்படும்.

இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரசுக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். ஏனெனில் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக பத்தாண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், மக்களைச்  சந்திக்க பயந்து ஓடி ஒளிந்த போது காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வளவு வேதனைப்பட்டர்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

தியாகிகளை காங்கிரஸ் என்றைக்குமே மதித்திருக்கிறது. துரோகிகளையும், சந்தர்ப்ப வாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நீங்களாகவே வெளியேறியதற்கு மீண்டும் நன்றியைத்  தெரிவித்து, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரையுமே இளங்கோவன் மறைமுகமாக குறிப்பிடுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply