இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். தொகாடியாவின் சர்ச்சை பேச்சு

thogadiaவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டு மாநாடு திருச்சியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன்பாய் தொகாடியா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவில் பேசிய தொகாடியா, “”விஸ்வ இந்து பரிஷத் பொன்விழா ஆண்டை  கடந்தாலும் விழாவைக் கொண்டாடவில்லை. அயோத்தியில் ராமர்கோயில் கட்டி முடிக்கும்போதுதான் கொண்டாட உள்ளோம். 14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு முஸ்லிம்கள் இல்லை. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவர்கள் இல்லை. மெக்காவிலும், மதினாவிலும், ஜெருசலேத்திலும் பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இல்லை. உலகெங்கும் இந்துக்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன்படி சொந்த மதத்தை பிரசாரம் செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், அதை சிலர் மதமாற்றம் செய்வதற்கான உரிமை என்று கருதி பேசி வருகின்றனர். மத மாற்றத்தை விசுவ இந்து பரிஷத் தொடர்ந்து எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டும்.

இன்றைய நிலையில் உலகில் செல்வசெழிப்பு, வளம், கல்வி என எல்லாவற்றிலும் உயர்ந்திருக்கும் நாடாகக் கூறப்படுவது அமெரிக்கா. ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு அந்தநிலையில் இருந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 35 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது ஒரு சதவிகிதமாகத்தான் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பாதுகாப்பாக, செல்வ செழிப்பாக வாழ்ந்தோம். வீடு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இன்றைய நிலையில் இந்துக்களின் நிலை எப்படியிருக்கிறது. நம்முடைய கோயில்கள் எல்லாம் சிதைக்கப்பட்டுவிட்டன. விவசாயம், வர்த்தகம், கல்வி எல்லாம் சீரழிக்கப்பட்டுவிட்டது.

1947ல் பாகிஸ்தானில் இந்துக்கள் 10 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் தற்போது இந்துக்கள் ஒரு சதவிகிதம்தான் உள்ளனர். அதுபோல, ஆப்கானிஸ்தானில் 10 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் சதவிகிதம் 0.1 சதவிகிதமாகத்தான் உள்ளது. 2001ல் 82 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 79 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பற்றி பேசும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள், இந்துக்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பை பற்றி பேசும் அரசியல் கட்சிகள் வேலையில்லாத 5 கோடி இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில்லை. இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்துக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் எனில் நாம், மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். மதமாற்றம் கூடாது என வலியுறுத்த வேண்டும். தாய் மதத்துக்கு திரும்புதல் பணியை மேற்கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டத்துக்கு சட்டப்படி ஆதரவு தர வேண்டும். அதுமட்டுமல்லாமல்  கீழ்கண்ட  6 செயல்திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 3 கோடி வங்கதேசத்தவர்களை வெளியேற்றிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நாளை சென்னை, டெல்லியை ஆக்கிரமித்துவிடுவர். ஜெருசேலம் செல்வதற்கும், மக்காவிற்கு செல்வதற்கும் நிதியுதவியை அளிக்கும் அரசுகள், இந்துக்கள் திருப்பதி சென்று வருவதற்கு ஒரு ரூபாய் கூட உதவி செய்வதில்லை. இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.  இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டப்படியான பணிகளை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொள்ளும்.

இந்தியாவில் இந்துக்கள் பசியால் உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடாது. பணம் இல்லாததால் கல்வி கற்க முடியாத நிலை உருவாகக் கூடாது. வேலைவாய்ப்பற்ற இந்து இளைஞர்கள் தொடரக்கூடாது. எனவே தினமும் ஒருவருக்கு இலவச மருத்துவ சேவை என்ற நிலையை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்து இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் இந்த விழாவில் விஸ்வ இந்து பரீஷத்தின் மாநில பொருளாளர் என்.ஆர்.என்.பாண்டியன் தலைமை வகித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.சேதுராமன், கோட்டத் தலைவர் பிரசன்னம் முன்னிலை வகித்த இந்த மாநாட்டில், ஶ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தைச் சேர்ந்த சுவாமி நியமானந்த மகாராஜ்,விசுவ இந்து பரிஷத் மாநில இணைச் செயலர் எஸ்.கோபால்ரத்தினம், மாநிலத் தலைவர் பெரி.குழைக்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Leave a Reply