ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணிபுரியும் திமுக நிர்வாகிகளிடம் அடிக்கடி மு.க.ஸ்டாலின் பேசி உற்சாகப்படுத்தி வருவதால், திமுகவில் பெரும் மகிழ்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக தேர்தல் பணிகள் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் அனைவருமே ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கி தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் அ.தி.மு.க.வினருக்கு ஈடு கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக நிர்வாகிகளை நேரில் உற்சாகப்படுத்தவும், தேர்தல் பிரச்சாரம் செய்யவும், வருகின்ற 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
மேலும் நேற்று திடீரென மு.க.ஸ்டாலின் தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஸ்ரீரங்கம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும், இன்னும் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீரங்கத்தில் தி.மு.க.வினர் ஆற்றி வரும் தேர்தல் பணிகளை வெகுவாக பாராட்டிய மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த உற்சாகமூட்டி இருக்கிறார்.