பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக தயாநிதி மாறனின் முன்னாள் செயலாளர் உள்பட மூன்று பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேர்களையும் காவலில் விசாரிக்க சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது.
சி.பி.ஐ. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மாலா, சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவில் கவுதமன் உள்பட 3 பேரையும் காவலில் எடுப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை என்பதாலும், சிபிஐ முறையாக அந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவின் காரணமாக இந்த வழக்கில் சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் விரைவில் தகுந்த காரணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.