பிப்ரவரி 25 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வேலைநிறுத்தம். வங்கி ஊழியர்கள் அதிரடி.

strikeசம்பள உயர்வு பிரச்சினை உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் வங்கி நிர்வாகத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி பிப்ரவரி 25 முதல் 28-ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதால் வங்கிகளிடையே பணப்பரிமாற்றம் முடங்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, புதிய மருத்துவ திட்டம் செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்திய வங்கிகள் சங்கம் ஊதிய உயர்வை 11 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. மேலும், ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் வங்கி ஊழியர் சங்கம், வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்தது.

இந்நிலையில், மும்பையில் நேற்று இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஊதிய உயர்வை 12.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீத மாக உயர்த்தி தருவதாகக் கூறப்பட்டது. இதை ஊழியர் சங்கத்தினர் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 25 முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திலும், மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.

Leave a Reply