“மாதொருபாகன்” புத்தக தலைப்பை பயன்படுத்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எதிர்ப்பு

19-1421637669-perumal-muruganமாதொருபாகன் புத்தக தலைப்பை சினிமா படத்திற்கு பயன்படுத்த அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘மாதொருபாகன்’ என்ற நாவல் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழா பற்றி வெளியான சில கருத்துகளால் இப்புத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

சாதிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, எழுத்துக்கு முழுக்கு போடுவதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார்.

இந்நிலையில், அண்மையில் சில செய்தித்தாள்களில் ‘மாதொருபாகன்’ என்ற தலைப்பில் சினிமாப்படம் ஒன்று வெளியாகயிருப்பதாக விளம்பரங்கள் வெளியாகின.

அந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளித்துள்ள பெருமாள் முருகன், “நான் இலக்கியத்தில் இருந்து முழுவதுமாக விலகி நிற்கிறேன். எனது மாதொருபாகன் நாவல் தலைப்பை பயன்படுத்திக் கொள்ள எந்த ஒரு சினிமா நிறுவனத்துக்கும் நான் அனுமதியளிக்கவில்லை. எனது துயரத்தை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை நினைக்கையில் மிகுந்த வேதனையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

பெருமாள் முருகனின் நண்பர்களுள் ஒருவரான ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறுகையில், “சமூகத்தால் துரத்தப்பட்டு, மூலையில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு எழுத்தாளரின் துயரத்தை சுயநலத்துக்காக சாதகப்படுத்த நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது” என கூறியுள்ளார்.

Leave a Reply