ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் நேரில் ஆஜராக தங்களுக்கு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளதை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் அளித்த மனுவை முதலில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் பின்னர் அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், 2007ஆம் ஆண்டில் ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் நிறுவனர் சிவசங்கரன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாகவும், பங்குகள் விற்பனை மூலம் சன் குழுமத்தின் பங்குகளின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் ஏர்செல் இயக்குனர் சிவசங்கரன் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவில் அடிப்படையில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யுமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததோடு, மார்ச் 2ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
மேலும், 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை போதுமானதாக உள்ள காரணத்தால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த நிலையில், 2ஜி தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் தங்களது விசாரணைக்கு வர வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதை சிபிஐ எடுத்து கூறியதை அடுத்து, மாறன்கள் மனு மீதான உத்தரவை சுப்ரீம் கோர்ட் திரும்ப பெற்றது.