உலகமெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமான கொண்டாடி வரும் நிலையில் இந்த தினத்தை பெற்றோர் தினமாக கொண்டாட சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ராஜிம் கும்பமேளா என்ற நிகழ்ச்சியில் சாமியார் ஆசாராம் பாபு பேசும்போது, காதலர் தினத்தை, அன்னையர் மற்றும் தந்தையர் தினமாகக் கொண்டாட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு காதலர் தினத்தை அன்னையர் மற்றும் தந்தையர் தினமாகக் கொண்டாட ஆளும் பாரதிய ஜனதா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் “இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று அன்னையர் மற்றும் தந்தையர் தினம் கொண்டாடப்படுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக உத்தரவு ஏதும் அனுப்பப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, 14ஆம் தேதியன்று மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அதன் நிர்வாகம் அழைப்பு விடுக்கும். அந்த அழைப்பை ஏற்று வரும் பெற்றோர்களுக்கு, அவர்கள் பிள்ளைகள் மாலை அணிவித்து, திலகமிட்டு கவுரவப்படுத்துவார்கள்.