காட்டு ராஜாவான சிங்கம், எருமை ஒன்றை அடித்து உணவாக உட்கொள்ள இருந்த நிலையில் இருவிலங்குகளுக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையில் சிங்கத்தை எருது வென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஜாம்பியா நாட்டின் காடு ஒன்றில் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு புகைப்படக்கலைஞர் பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது.
ஜாம்பியா நாட்டில் உள்ள சவுத் லுவாங்கா தேசிய பூங்காவில் சமீபத்தில் விலங்குகளை புகைப்படம் எடுக்க சென்றிருந்த மேட் ஆர்ம்ஸ்ட்ராங் போர்ட் என்பவர் சிங்கம் ஒன்றிற்கும் எருமை மாடு ஒன்றிற்கும் நடைபெற்ற பயங்கர சண்டையை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் கிட்டத்தட்ட இரு விலங்குகளுமே பலத்த காயமடைந்தது. இந்த நிலையில் எருதுகள் கூட்டம் ஒன்று திடீரென அந்த பகுதிக்கு வந்து சிங்கத்தை துவம்சம் செய்துவிட்டது. எருதுகளால் தாக்கப்பட்ட சிங்கம் பலியான காட்சிகளைத்தான் மேட் ஆர்ம்ஸ்ட்ராங் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த புகைப்படங்கள் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.